மனமது செம்மையானால் மந்திரம் வேண்டாம்' என்கிறார் அகத்திய சித்தர். 'மனமது குணமானால்
மருந்துகள் தேவையில்லை' என்பது மலர் மருத்துவத்தைக் கண்டுபிடித்த டாக்டர் எட்வர்ட்
பாச்-சின் கருத்து.மலர் மருத்துவம் லண்டனைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் எட்வர்ட்
பாச் நோய்களை முழுமையாக குணப்படுத்த வேண்டும் எனமுடிவு செய்தார்.அலோபதி மருத்துவத்தை
விட்டு, ஹோமியோபதிக்கு மாறினார். ஆனாலும் ஹோமியோபதியை இன்னும் எளிமைப்படுத்த வேண்டும் என்ற
ஆர்வம் ஏற்பட்டது. தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். எட்வர்ட் பாச்சின் ஆராய்ச்சியில் 'எந்த ஒரு
நோய்க்கும் மனமே காரணம்' என்ற
உண்மை புலப்பட்டது. மனதைச் சரி செய்தால் பெரும்பாலான நோய்கள் குணமாகிவிடும் என்று
உறுதியாக நம்பினார்.இதையடுத்து, மனதை சரி செய்யும் மருந்துகளைத் தேடி மலைகள், காடுகள்
என அலைந்தார். மூலிகைகளையும் மலர்களையும் பறித்து அவற்றை உண்டு பரிசோதனைகள் செய்தார்.
சில மலர்களைப் பயன்படுத்தியபோது அவர் சில மாற்றங்களை உணர்ந்தார்.அந்த இழையைப்
பிடித்துக்கொண்டு ஆராய்ச்சியை மேலும் தீவிரப்படுத்தினார்.38 வகையான மலர் மருந்துகள்
மனதை ஒழுங்குபடுத்த உதவியதாகக் கண்டுபிடித்து அவற்றை வரிசைப்படுத்தினார்.இன்றைக்கு
உலகம் முழுவதும் இந்த மலர் மருத்துவம் பரவி ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்.